இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையம் இன்று மீண்டும் விவாதிக்க உள்ளது.
இந்தக் கூட்டத்தில் இலங்கை போர்க்குற்றங்கள் மீதான சர்வதேச நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கையை மனித உரிமை ஆணையர் ஜெத் ராட் உல் உசேன் தாக்கல் செய்கிறார்.
இந்த அறிக்கை மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதால் நல்லெண்ண நடவடிக்கையாக அறிக்கை தாக்கல் செய்வது செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
மேலும் இந்த விவகாரத்தில் இலங்கையின் புதிய அரசு ஒத்துழைப்பு அளிக்க முன்வந் துள்ளதால் இம்முடிவு எடுக்கப் பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசிடம் வெள்ளிக்கிழமை இரவு அளிக்கப்பட்டது. இலங்கை அரசு தனது பதிலை எழுத்துப்பூர்வமாக அளிக்க 5 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று முந்தைய கூட்டங்களில் அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இம்முறை அவ்வாறு இல்லாமல், உள்நாட்டு விசாரணைக்கு ஆதர வாக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரும் என எதிர்பார்க் கப்படுகிறது.
இத்தீர்மானம் போர்க்குற்ற விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்பதால் இதற்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என தமிழர்கள் தரப்பில் குரல் எழுந்துள்ளது. எனவே இந்தக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமை ஆணையத்தின் வழக்கமான கூட்டத்தொடராக இக்கூட்டம் 3 வார காலம் நடை பெறும். இக்கூட்டத்தில் இலங்கை விவகாரம் மட்டுமின்றி, சிரியா, ஏமன், சூடான் உள்ளிட்ட நாடுகள் தொடர்பாகவும், மரண தண்டனை, புலம் பெயர்வோரின் உரிமைகள், அமைதிக்கான உரிமை, பயங்கரவாத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் வரைவு தீர்மானங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.