உலகம்

ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 40 கிலோவுக்கும் அதிகமான கம்பளி ரோமம் கத்தரிப்பு

ஐஏஎன்எஸ்

ஆஸ்திரேலியாவில் ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 40-45 கிலோ கம்பளி கத்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த செம்மறி ஆடு புதனன்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெரா அருகே கிறிஸ் என்ற இந்த செம்மறி ஆட்டின் உடலைப் போர்த்தியுள்ள 40-45 கிலோ கம்பளியை கத்தரித்து எடுக்கும் கடினமான பணி நடந்தேறியது. அதாவது 30 ஸ்வெட்டர்களுக்கான கம்பளி ரோமம் அதன் உடலில் இருந்துள்ளது.

இதற்கு முன்னதாக நியூஸிலாந்தில், ஷ்ரீக் என்ற செம்மறி ஆட்டிலிருந்து சுமார் 27 கிலோ கம்பளி கத்தரித்து எடுக்கப்பட்டது, தற்போது அதிசயிக்கத் தக்க வகையில் இந்த ஆஸ்திரேலிய செம்மறி ஆட்டிலிருந்து 40-45 கிலோ கம்பளி எடுக்கப்பட்டிருக்கிறது. ரோமம் கத்தரிக்கப்பட்ட பிறகு அதன் எடை பாதியாகக் குறைந்தது.

அதாவது அவ்வப்போது செம்மறி ஆட்டிலிருந்து அதன் வளரும் கம்பளி உரோமத்தை கத்தரித்து விடவேண்டும் இல்லையெனில் ஆடு கடும் உபாதைக்குள்ளாகும் என்று ஆஸ்திரேலிய விலங்கு வதைத் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் செம்மறி ஆட்டில் 5 ஆண்டுகால கம்பளி உரோமம் வளர்ந்திருந்தது. இதன் காரணமாக ஆட்டினால் நடக்கக் கூட முடியவில்லை என்று ஏபிசி செய்திகள் குறிப்பிட்டுள்ளது.

இந்த வகை ஆடுகள் கம்பளித் தயாரிப்பிற்கென்றே வளர்க்கப்படுபவை, எனவே அவ்வப்போது கத்தரிக்கப் படவில்லையெனில் இந்த நிலைமையே ஏற்படும் என்று ஆஸ்திரேலிய மிருகவதைத் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT