ஐ.நா. அமைதிப் படையில் இந்தியா வுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத் தியுள்ளார்.
ஐ.நா. பொது சபை மாநாட்டின் ஒரு பகுதியாக அமைதிப் படை பணிகள் குறித்த சிறப்பு கூட்டம் நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பேசினர்.
ஐ.நா. அமைதிப் படையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இந்திய வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐ.நா. கேட்டுக் கொண்டபடி இப்போது கூடுதலாக 850 இந்திய வீரர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்கள் தவிர மூன்று போலீஸ் குழுக்களும் அமைதிப் படையில் இணைக்கப்பட உள்ளன. பல்வேறு நாடுகளில் அமைதிப் பணியின் போது 161 இந்திய வீரர்கள் உயிரிழந் துள்ளனர்.
அமைதிப் படைக்கு கூடுதல் வீரர்களை அளித்து வரும் இந்தியா வுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று நீண்டகாலமாக குற்றம் சாட்டப் பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் பேசியதாவது:
அமைதிப் படைக்கு அதிக வீரர்களை அனுப்பும் நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை. குறிப்பாக முடிவெ டுக்கும் அதிகார குழுவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
அமைதிப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத் தப்படுகின்றனர். ஆனால் அதை தாண்டி பல்வேறு சிக்கலான சவால்கள் உள்ளன. அவை குறித் தும் ஆலோசிக்கப்பட வேண்டும்.
ஆயுதப் பலத்தால் அமைதிப் படை செயல்படவில்லை. அதில் பணியாற்றும் வீரர்கள்தான் அமைதிப் படைக்கு அடிப்படை ஆதாரம். அவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஐ.நா. அமைதிப் படையில் உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தின் முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
ஐ.நா. அமைதிப் படையை நவீனப்படுத்த வேண்டும். சில நாடு களில் அமைதிப் படை வீரர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடு வதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் சகிப்புத் தன்மை கூடாது. ஐ.நா. உறுப்பு நாடுகள் அமைதிப் படையின் செயல்பாடுகளில் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்ட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பரஸ்பரம் கையசைத்த நவாஸ், மோடி
ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் நியூயார்க்கில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஆனால் இருவரும் சந்தித்துப் பேசவில்லை. ஐ.நா. அமைதிப் படை பணிகள் குறித்த கூட்டத்தில் மோடியும் நவாஸும் எதிரெதிர் திசையில் அமர்ந்திருந்தனர்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மோடியை நோக்கி நவாஸ் கையசைத்தார். அதை புன்முறுவலுடன் ஆமோதித்த மோடி பதிலுக்கு கையசைத்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு நவாஸை நோக்கி மோடி கையசைத்தார். பதிலுக்கு நவாஸ் தலையை ஆட்டி புன்னகைத்தார். ஆனால் இந்த கூட்டத்தில் இரு தலைவர்களும் கைகுலுக்கவோ, பேசவோ இல்லை.
கடந்த ஜூலையில் ரஷ்யாவின் உபா நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது மோடியும் நவாஸும் சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் காஷ்மீர் விவகாரத்தால் இந்த பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ரத்து செய்துவிட்டது. இதன்பின் இருநாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது.