உலகம்

கரோனாவால் மனநலம் சார்ந்த சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளன: உலக சுகாதார அமைப்பு

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பு காரணமாக 93% நாடுகளில் மனநலம் சார்ந்த சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நிலவும் கரோனா பாதிப்பு காரணமாக 130 நாடுகளில் மனநலம் சார்ந்த சிகிச்சைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும், இது தொடர்பான நிதியுதவிகளும் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி நடைபெறவுள்ள , மனநலம் தொடர்பான நிகழ்வில் பிரபலங்கள், உலகத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் செயல்பாட்டில் உலக சுகாதார அமைப்பு ஈடுபட்டுள்ளது.

3 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் முதல் இரண்டு இடங்களில் அமெரிக்காவும், இந்தியாவும் உள்ளன.

கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT