டொனால்டு ட்ரம்ப் 
உலகம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ட்ரம்ப்புக்கு ‘ரெம்டெசிவர்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ‘ரெம்டெசிவர்’ மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு, நோயின் தன்மையின் அடிப்படையில் ‘ரெம்டெசிவர்’ மருந்து அளிக்கப்படுகிறது. கரோனா சிகிச்சைக்கான மருந்தாக இது இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. பரிசோதனை அடிப்படையிலான மருந்தாகவே கருதப்படுகிறது.

அமெரிக்காவில் கரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு அவசர காலத் தேவைக்காக இம்மருந்தை பயன்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் நேற்று முன்தினம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாஷிங்டன் புறநகர் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ட்ரம்ப் அனுமதிக்கப்பட்டார். மெலனியா, வெள்ளை மாளிகையிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கான்லி நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிக்கையில், “அதிபர் ட்ரம்ப் நலமாக இருக்கிறார். அவருக்கு ‘ரெம்டெசிவர்’ மருத்து அளிக்க மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்தனர். அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அவருக்கு ரெம்டெசிவர் சிகிச்சையை தொடங்க முடிவு செய்தோம். அதன்படி அதிபர் முதல் ‘டோஸ்’ மருந்து எடுத்துக் கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT