ஒசாமா பின் லேடன் இருப்பிடத்தை அமெரிக்காவின் சிஐஏ-வுக்கு காட்டிக் கொடுத்த மருத்துவர் செய்திருந்த மனு மீதான விசாரணை 16-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதையடுத்து அவரது வழக்கறிஞர் பாகிஸ்தான் அரசை சாடியுள்ளார்.
ஷகீல் அப்ரீடி என்ற அந்த மருத்துவர் மஞ்சள் காமாலை வாக்சைன் திட்டம் என்ற பெயரில் பின் லேடனை கண்டுபிடித்து அமெரிக்காவிடம் காட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு காட்டியும் கொடுத்தார். இதனையடுத்து 2011-ல் பின் லேடன் கொல்லப்பட்டார்.
இதன் பிறகு, தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கோர்ட் ஒன்று ஷகீல் அப்ரீடிக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
ஆனால் கடந்த ஆண்டு தீர்ப்பாயம் ஒன்று அவரது தண்டனையை 10 ஆண்டுகள் குறைத்து தீர்ப்பளித்தது. ஆனால் கடந்த மார்ச்சில் ஷகீல் அப்ரீடி தனக்கு ஜாமின் அளிக்கவும், புதிய விசாரணைக் கோரியும் மேல்முறையீடு செய்திருந்தார்.
ஆனால் இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடைபெறாமல் 16 முறை இவரது மேல்முறையீடு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காரணம், கைபர் பழங்குடி நிர்வாகம் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இன்னமும் சமர்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, கைபர் நிர்வாகம் வேண்டுமென்றே தாமதம் செய்கிறது என்றும் இதனால் மருத்துவர் ஷகீல் அப்ரீடி சிறையில் வாடி வருகிறார் என்றும் அவரது வழக்கறிஞர் குவாமர் நதீம் அப்ரீடி தெரிவித்துள்ளார்.