உலகம்

மலேசியாவில் படகு கவிழ்ந்து 14 பேர் பலி

பிடிஐ

மலேசியாவில் மலக்கா நீர்சந்தி பகுதியில் இந்தோனேசிய அகதிகளுடன் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் 14 பேர் நீரில் மூழ்கி பலியாயினர். மேலும் காணா மல் போனவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து, மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பின் தலைவர் உள்ளூர் உயர் அதிகாரி முகமது அலியாஸ் ஹம்தன் கூறியதாவது:

மத்திய செலங்கர் மாகாணம் சபக் பெர்னம் நகருக்கு அருகே மேற்குக் கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் மரத்தாலான சிறிய படகு ஒன்று திடீரென கவிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அப்பகுதி மீனவர்கள் 15 பேரை உயிருடனும் மேலும் 14 பேரை சடலமாகவும் மீட்டனர்.

இதற்கிடையே, அப்பகுதிக்கு விரைந்து சென்ற கடற்படையினர் காணாமல் போன மற்றவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணியில் 12 கப்பல்கள், ஒரு விமானம் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் படகில் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமார் 100 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் படகில் பயணம் செய்தவர்கள் மலேசியா வுக்கு வந்தார்களா அல்லது இங்கிருந்து வெளியேறினார்களா என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT