உலகம்

ராணுவத்தில் 3 லட்சம் வீரர்கள் குறைப்பு: 2ம் உலகப்போர் வெற்றி தினத்தில் சீனா அறிவிப்பு

அதுல் அனேஜா

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வெற்றி கொண்டதன் 70வது ஆண்டையொட்டி சீனாவில் நடந்த பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை அடுத்து ராணுவ பலத்தை குறைப்பதாக சீன அதிபர் ஜி ஜின் பிங் தெரிவித்தார்.

தலைநகர் பெய்ஜிங்கில் தியனமென் சதுக்கத்தில் மிக பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பை நடத்தி உலகை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது சீனா.

இந்த நிகழ்ச்சியை சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். அணிவகுப்பை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன், உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலர் மார்கரெட் சென், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராணுவ அணிவகுப்பில் சுமார் 12 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். 200 விமானங்கள், டாங்கிகள், ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சியின்போது, சீன ராணுவத்தில் 3 லட்சம் வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என அதிபர் ஜி ஜின் பிங் அறிவித்தார்.

ஜப்பானிய ராணுவம், சீனாவின் மீது 1937-ம் ஆண்டில் முழுவீச்சுடன் படையெடுப்பு நடத்தியது. சுமார் 8 ஆண்டுகள் நீடித்த இந்தப் போரின் இறுதியில், 1945 ஆகஸ்ட் 15-ம் தேதி ஜப்பான் சரணடைந்தது. இந்தப் போரில் மட்டும் சுமார் 3.5 கோடி சீன வீரர்கள் மற்றும் மக்கள் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் கடும் தோல்வி அடைந்ததற்கு சீனாவின் தீரமான போராட்டமே முக்கியமாகக் கருதப்படுதிறது.

இரண்டாம் உலகப் போரில், 20 லட்சம் ஜப்பானிய வீரர்கள் நேச நாடுகளின் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். அதில், 70 சதவீதம்பேர் சீன மண்ணில் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.

SCROLL FOR NEXT