அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருடன் அலுவலக ரீதியாக தொடர்பில் இருந்த அனைவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தனக்கு கரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து பாம்பியோ கூறும்போது, “ நான் சிறப்பாக உணர்கிறேன். ட்ரம்புக்கு கரோனா பரிசோதனை எடுத்த அடுத்த 30 நிமிடத்தில் எனக்கும் எடுக்கப்பட்டது, எனக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. அதிபர் ட்ரம்பும் அவரது மனைவி மெலானிய ட்ரம்பும் விரைவில் குணமடைய நாங்கள் வேண்டி கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். இதுவரை அமெரிக்காவில் 74 லட்சத்து 94 ஆயிர்தது 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 12 ஆயிரத்து 660 பேர் உயிரிழந்துள்ளனர். 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்.
அமெரிக்காவில் தீவிரமாக கரோனா வைரஸ் பரவிய நேரத்தில் கூட முகக்கவசம் அணியாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலம் வந்தார்.அதிபர் ட்ரம்பின் ஆலோசகர் ஹிக்ஸ் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.