வடக்கு இங்கிலாந்தில் கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் குறிப்பாக லிவர்புல் போன்ற நகரங்களில் தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவு விடுதிகள் மற்றும் மதுபானக் கூடங்களில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்க உள்ளன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கரோனா பரவல் அக்டோபர் மாதத்தில் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.