ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் பத்வா வழங்கியுள்ளதற்கு அமெரிக்கா வரவேற்பும், பாராட்டும் தெரிவித் துள்ளது.
சிரியா, இராக்கில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் தீவிரவாத அமைப்பான ஐஎஸ் மீது இந்திய முஸ்லிம் மத தலைவர்கள் 1,500 பேர் சேர்ந்து ‘பத்வா’ அறிவித்துள்ளனர். இந்தியாவில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் மத தலைவர்கள் ஒருங்கிணைந்து கூட்டு பத்வா அறிவித்திருப்பது இதுவே முதல் முறை.
‘வன்முறையை இஸ்லாம் அறவே ஒதுக்குகிறது. ஆனால், ஐஎஸ் அதனை நீடித்திருக்கச் செய்கிறது’ என பத்வா ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஸின் செயல்பாடுகள் இஸ்லாமிய நெறிகளுக்கு எதிரானது என்று கூறி பத்வா பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பத்வாக்கள் 15 பாகங்களாக உள்ளன. இதன் நகல்கள், ஐஎஸ் அமைப்பு தொடர்பான இந்திய முஸ்லிம்களின் கருத்தை தெளிவுபடுத்துவதற்காக ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி-மூன் மற்றும் இதர தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய முஸ்லிம்களின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெலன் ஒயிட் கூறியிருப்பது: உலகிலேயே முஸ்லிம்கள் அதிகமுள்ள 2-வது பெரிய நாடான இந்தியாவில் இருந்து இஸ்லாமிய தலைவர்கள் பலர் இணைந்து ஐஎஸ் தீவிரவாதி களுக்கு எதிராக பத்வா பிறப்பித்திருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் கொடூரத்தை நிகழ்த்தி வந்த ஐஎஸ் தீவிர வாதிகள் இப்போது தெற்கு ஆசியா வுக்கும் தங்கள் தீவிரவாத நடவடிக் கைகளை கொண்டு சென்றுள் ளனர். இந்த நேரத்தில் இந்திய முஸ்லிம்கள் ஐஎஸ் தீவிரவாதி களுக்கு எதிரான குரல் கொடுத்தி ருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த தீவிரவாதி களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.