உலகம்

சிரியாவில் லட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் பலியாவதே அகதிகள் நெருக்கடிக்கு காரணம்: ஆய்வில் தகவல்

ஏஎஃப்பி

சிரியாவின் போர்ச்சூழல் காரணமாக 2011 முதல் பலியான அப்பாவி மக்கள் சுமார் 2 லட்சம் பேர்களில் கால்பகுதியினர் பெண்கள் மற்றும் குழந்தைகள், இதனால்தான் மக்கள் அங்கிருந்து பெருமளவுக்கு அகதிகளாக வேறு நாடுகளுக்கு தஞ்சம் தேடி அலையும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில் அகதிகள் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அப்பாவி மக்கள் பலியாவதைக் குறிப்பிட்டுள்ளது.

சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் பலியான அப்பாவி மக்களில் 23% குழந்தைகள். மாறாக இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதஅமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் கோலோச்சும் பகுதிகளில் குழந்தைகள் பலியாகும் விகிதம் 16% என்கிறது இந்த ஆய்வு.

அதுவும் பலியாவதற்கான காரணத்தை ஆராய்ந்தால் அரசப்படைகள், கிளர்ச்சிப்படைகளின் தாக்கங்களுக்கு இடையே முரண்பாடு மிகவும் கூர்மையாக உள்ளது.

அரசு சாரா ஆயுதக்கிளர்ச்சியாளர்கள் கோலோச்சும் பகுதிகளில் அரசுப் படைகளின் குண்டு வீச்சு மற்றும் ராணுவத் தாக்குதல்களில் பலியாவோரில் முக்கால் வாசி குழந்தைகள்.

அரசப்படைகளின் பிடியில் இருக்கும் பகுதிகளில் வான்வழி தாக்குதல்களில் குழந்தைகள் பலி இல்லை. ஆனால் மற்றவர்களின் பலி விகிதத்தில் இரண்டில் மூன்று பங்கு குண்டுவீச்சுத் தாக்குதலில் ஏற்படுவதே.

ஆனால் அரசுப்படைகள் தரப்பிலும் சரி, கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும் ஆயுத முகாம்களே இலக்கு என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் சிரியா குழந்தைகள் பலியாவது இந்த இருவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையில்தான் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

இராக்கில் இதே பிரச்சினை இருந்த அந்த பத்தாண்டுகளில் இதே அளவில்தான் குழந்தைகள் பலியாயினர். ஆனால் சிரியாவில் குழந்தைகளை எந்த அளவுக்கு வேண்டுமென்றே தாக்குதல் இலக்காக்குகின்றனர் என்பது தெரியவில்லை.

பிரஸல்ஸைச் சேர்ந்த லூவெயின் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேவரதி குஹா-சபிர் என்ற பேரழிவுக் கொள்ளை நோய் ஆய்வுத்துறை பேராசிரியர் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிரியா போரில் பல்வேறு ஆயுதங்களின் பிரயோகங்கள் பல்தரப்பட்ட குடிமக்கள் மீது செலுத்தும் தாக்கம் பற்றிய முதல் ஆய்வாகும் இது.

"குடிமக்கள் திரளில் வெடிப்பு ஆயுதங்கள் மற்றும் ரசாயன ஆயுதங்களுக்கு ஆண்களை விட குழந்தைகளும் பெண்களுமே அதிக அளவில் பலியாகின்றனர்" என்று இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரியாவில் போரில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் குடிமக்கள் சேர்த்து 2011 மார்ச் முதல் 2014 ஏப்ரல் வரை 191,369 பேர் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வாளர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புள்ளிவிவரங்களின் படி 78,769 பலிகளில், 77,646 மரணங்கள் அரசுசாரா கிளர்ச்சிப் படைகள் கோலோச்சும் பகுதிகளிலேயே ஏற்பட்டுள்ளது, அதாவது அரசப்படைகளின் தாக்குதலில் அதிக குடிமக்கள் பலியாகின்றனர் என்கிறது இந்த ஆய்வு.

எனவே, ஐரோப்பாவுக்கு இன்று ஏற்பட்டுள்ள அகதி நெருக்கடிக்கு சிரியா போரில் பெரிய அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியாவதே காரணம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது இந்த ஆய்வு.

SCROLL FOR NEXT