பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்குக் கரோனா மருத்துவப் பரிசோதனை உபகரணங்களை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, “அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கரோனாவுக்கு இரு வகையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. பிசிஆர் சோதனை மாதிரி இல்லாமல் இவை 15 முதல் 30 நிமிடங்களில் முடிவைத் தருகின்றன. இம்மாதிரியான விரைவான முடிவுகள் கரோனா பரவலைத் தடுக்கும்.
மேலும், கரோனா பரவலால் பாதிக்கப்பட்டவர்களையும் விரைவில் கண்டறியலாம். எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய 133 நாடுகளுக்கு இம்மாதிரியான கரோனா மருத்துவப் பரிசோதனை உபகரணங்களை வழங்க இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் சுமார் 3.4 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகினர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.