உலகம்

கரோனா பரவல் தீவிரம்: இரவு நேரக் கட்டுப்பாடுகளை அதிகரித்த துபாய்

செய்திப்பிரிவு

கரோனா பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து இரவு நேரக் கட்டுப்பாடுகளை துபாய் அரசு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து துபாய் அரசுத் தரப்பில், “துபாயில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரவு நேரக் கட்டுப்பாடுகளை அரசு அதிகரித்துள்ளது. உணவகங்கள் மற்றும் பார்களை ஒரு மணிக்குள்ளாக மூட உத்தரவிட்டுள்ளது. இரவு நேரங்களில் பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் கடந்த ஜூலை மாதம் கரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுக்குள் வந்தது. ஆனால், தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன.

ஐக்கிய அமீரகத்தில் இதுவரை 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஐக்கிய அமீரகத்தில் 1000 என்ற அளவில் கரோனா தொற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT