தென்கொரியாவுக்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்டை (42) கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்கொரிய தலைநகர் சியோலில் கடந்த மார்ச் மாதம் விருந்து நிகழ்ச்சியொன்றில், தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்ட்டை, கிம் கி ஜோங் (56) என்பவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சிகிச்சையின்போது அவரது முகத்தில் 80 இடங்களில் தையல் போடப்பட்டது. எனினும், அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லாமல் பிழைத்தார்.
இத்தாக்குதல் சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மத்திய சியோல் மாவட்ட நீதிமன்றம், குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. "வழக்கு விசாரணையின்போது கிம் கி ஜோங் தான் செய்த தவறுக்கு வருந்தாமல் அச்செயலுக்கு நியாயம் கற்பிக்க முயற்சி செய்தார்" என நீதிபதி தெரிவித்தார்.
காவல்துறை விசாரணையின்போது, அமெரிக்கா-தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாகவே அமெரிக்க தூதர் மீது தாக்குதல் நடத்தியதாக கிம் தெரிவித்துள்ளார்.
கிம், வட கொரிய ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய ஜப்பான் தூதர் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
அமெரிக்க தூதர் மீதான தாக்குதலின் பின்னணியில் தாங்கள் இல்லை என வட கொரியா மறுத்தது குறிப்பிடத்தக்கது.