உலகம்

உலக மசாலா: என்ன அவசரம்... குழந்தையை, குழந்தையாக வளரவிடுங்களேன்...

செய்திப்பிரிவு

ட்டைக் கத்தியை வைத்து குழந்தைகள் சண்டை போடுவார்கள். ஆஸ்திரேலியாவில் பீரங்கி, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட போர் ஆயுதங்களையும் விலங்குகளையும் அட்டையில் செய்து சண்டைகளை நடத்தி வருகிறார்கள். ஹோஸ் சிகெல், ராஸ் கோகெர் என்ற நண்பர்கள் தங்களின் குழந்தை விளையாட்டுகளை பெரிய அளவில் அட்டைப் பெட்டிச் சண்டையாக நடத்தி வருகிறார்கள். ’’எங்களிடம் ஏராளமான அட்டைப் பெட்டிகள் குவிந்துவிட்டன. ஒருநாள் இந்த அட்டைப் பெட்டிகளை வைத்து போர் ஆயுதங்களைத் தயாரித்து, போட்டியாக நடத்தினால் என்ன என்று தோன்றியது. 2002-ம் ஆண்டு எங்கள் முதல் போட்டியை ஒரு பூங்காவில் ஆரம்பித்தோம். விளையாட்டாக ஆரம்பித்த இந்தப் போட்டி 13 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. போட்டியைக் காண்பதற்கும் பங்கேற்பதற்கும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். இதற்காக அட்டைகளில் பிரம்மாண்டமான போர்க் கருவிகளையும் டாங்குகளையும் உருவாக்குகிறோம். பாதுகாப்புக் கவசங்களும் அட்டைகளில் செய்யப்பட்டிருக்கும். போட்டி நடைபெறும் அன்று வீரர்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு களத்தில் குதித்துவிட வேண்டியதுதான். இசை, மக்கள் ஆரவாரம் என்று போர்க்களமே களை கட்டும். அனைத்து அட்டை ஆயுதங்களும் வாகனங்களும் கிழிக்கப்பட்ட பிறகு போட்டி முடிவடையும். ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளுக்கு இந்தப் போட்டி பரவிவிட்டது. நெதர்லாந்து, ரஷ்யாவிலும் போட்டியை நடத்த ஆரம்பித்துவிட்டனர். சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட விஷயம் இவ்வளவு தூரம் பரவும் என்று நாங்கள் நினைக்கவில்லை’’ என்கிறார் ராஸ் கோகெர்.

ஆயுத விளையாட்டுகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் உலகில், அட்டை விளையாட்டு வித்தியாசமானதுதான்…

கொரியாவில் வசிக்கிறார்கள் சாங் ஜின் யூ, ஷின் ஜி ஹூ தம்பதியர். தாங்களே திட்டமிட்டு உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் 5 மாதங்களில் தங்கள் உடலைச் சிற்பம் போல் மாற்றிக்கொண்டனர். தினமும் 3 மணி நேரம் ஏரோபிக் உடற்பயிற்சி செய்கிறார்கள். வாரத்துக்கு 2 நாட்கள் ஒன்றரை மணி நேரம் பளூ தூக்கும் பயிற்சி செய்கிறார்கள். ‘’செயற்கையாக நாங்கள் எங்கள் உடலை வடிவமைக்க முயற்சி செய்யவில்லை. உணவுக் கட்டுப்பாடே உலகின் மிகச் சிறந்த பிளாஸ்டிக் சர்ஜரி. முயற்சியும் பொறுமையும் இருந்தால் உடற்பயிற்சியிலும் உணவுக் கட்டுப்பாட்டிலும் நாம் நினைத்த உடல் வடிவத்தை அடைந்துவிட முடியும்’’ என்கிறார் சாங் ஜின் யூ. 150 கிராம் கோழி இறைச்சி, 120 கிராம் இனிப்பு உருளைக்கிழங்கு, 5 பாதாம் பருப்புகள், தக்காளி, வெங்காயம், முட்டைக்கோஸ் போன்றவற்றை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடுகிறார் சாங் ஜின். 4 முட்டைகளின் வெள்ளைக் கரு, 50 கிராம் உருளைக்கிழங்கு, கொஞ்சம் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் ஒருநாளைக்கு 5 முறை எடுத்துக்கொள்கிறார் ஷின் ஜி ஹூ. 83 கிலோவில் 16 சதவீதம் கொழுப்பு இருந்தது, இன்று 71 கிலோவில் 5 சதவீத கொழுப்பே இருக்கிறது என்கிறார் சாங் ஜின். 71 கிலோவில் 32 சதவீதம் கொழுப்பு இருந்தது, இன்று 49 கிலோவில் 18 சதவீத கொழுப்பே இருக்கிறது என்கிறார் ஷின் ஜி ஹூ. தாங்களே உருவாக்கிய உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிக விரைவாக எதிர்பார்த்த பலனை அளித்திருப்பதில் இருவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தங்களின் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு, எடை குறைப்பு குறித்த விளக்கங்களையும் அளித்து வருகிறார்கள்.

ம்… எடை குறைப்பு இன்று உலகின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது…

சீனாவின் ஹுனான் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் பரபரப்பான சாலைகளில் காரை அநாயசமாக ஓட்டிச் செல்கிறான். அவனது அப்பா கார் ஓட்டும் நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டே வீடியோ எடுத்திருக்கிறார். மகனை மடியில் வைத்துக்கொண்டு, ஆக்சிலரேட்டர், பிரேக், க்ளட்ச் போன்றவற்றை அப்பா கையாள்கிறார். ஸ்டீரிங்கைப் பிடித்தபடி கவனமாக காரை ஓட்டுகிறான் மகன். இந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர். ஒரு குழந்தையை கார் ஓட்ட வைத்து, அதை வீடியோவாகவும் எடுத்தது மிகப் பெரிய தவறு என்று எதிர்ப்புக் காட்டி வருகிறார்கள். சீனக் காவல்துறை விசாரணையில் இறங்கியிருக்கிறது.

என்ன அவசரம்... குழந்தையை, குழந்தையாக வளரவிடுங்களேன்...

SCROLL FOR NEXT