லண்டனில் கரோனா பரவல் இரண்டாம் கட்ட அலையை நெருங்குவதால், அங்கு ஊரடங்கு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து லண்டன் மேயர் சித்திக் கான் கூறும்போது, “அரசாங்க அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை முடிவில், லண்டனில் கரோனா பரவல் தீவிரமாகி வருகிறது என்பது தெளிவாகியுள்ளது. அதன் வேகம் கூடியுள்ளது. இரண்டாம் கட்ட அலையை நெருங்கிவிட்டோம். கரோனா பரவலைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிற பகுதிகளில் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலிப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி அடைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுவெளியில் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது.