அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி : கோப்புப்படம் 
உலகம்

மிகப்பெரிய தலைவர், உண்மையான நண்பர்: பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி ட்ரம்ப் புகழாரம்

பிடிஐ

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய தலைவர், உண்மையான நண்பர் என்று அவரின் 70-வது பிறந்த நாள் விழாவுக்கு வாழ்த்துக் கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டினார்.

பிரதமர் மோடிக்கு நேற்று 70-வது பிறந்த நாளாகும். பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா என பல முக்கிய அமைச்சர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள படம்.

சர்வதேச அளவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரி்க்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடிக்கு 70-வது பிறந்த நாள் வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அகமதாபாத் வந்தபோது நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகிழ்ச்சிகரமான 70-வது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவின் மிகப்பெரிய தலைவர், எனது உண்மையான நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு வலிமையானது, மனிதகுலத்தின் நன்மைக்கான சக்தியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்தபோது பிரதமர் மோடியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அப்படம் அகமதாபாத்தில் நடந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியி்ல 1,25,000 மக்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் கையை உயர்த்தி, எடுத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT