இந்தியா மட்டுமல்லாது கஜகஸ்தான், பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தை வழங்க ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது.
கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகில் பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்ய அரசு தயாரித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பூசி வரும் 13 ஆம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்படும் என ரஷ்ய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
இந்தச் சூழலில் இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎப்) மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 10 கோடி மருந்துகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யா நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎப்) இன்று கூறும்போது, “ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தை சுமார் 10 கோடி அளவில் இந்தியாவுக்கு வழங்க பிரபல மருந்தகத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தை இந்தியா, கஜகஸ்தான், பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு வழங்க ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது.
ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய்த் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.
இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதனைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா.