பள்ளியில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து 81 பள்ளிகளை மூட பிரான்ஸ் அரசுஉத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் கல்வித்துறை அமைச்சகம் கூறும்போது, “கடந்த வாரத்தில் மட்டும் புதிதாக பிரான்ஸில் மாணவர்கள் 2,100 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், ரென்னஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும் 83 மருத்துவ மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதல் பிரான்ஸில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் மார்சேய் மற்றும் லியோன் ஆகிய நகரங்கள் கரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. பிரான்ஸில் கடந்த சனிக்கிழமை மட்டும் 10,000 பேர்வரை கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் சமீப நாட்களாக கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.