நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து நேபாளத்தின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தரப்பில், “நேபாளத்தில் இன்று (புதன்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. ராம்சே, சிந்துபால்சோக் ஆகிய மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் நேபாளத்தின் கிழக்குப் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. எனினும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைந்து நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ரிக்டர் அளவில் 7.9 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
கரோனா வைரஸ்
நேபாளத்தில் 56,788 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,638 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 371 பேர் பலியாகி உள்ளனர்.
கரோனா பரவல்களுக்கு இடையே, நேபாளத்தில் உள்நாட்டு விமானச் சேவை செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.