உலகம்

நியூசிலாந்தில் கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

நியூசிலாந்தில் கரோனா கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21 ஆம் தேதிவரை தொடரும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறும்போது, “நியூசிலாந்தில் கரோனா கட்டுப்பாடுகள் அடுத்த ஒரு வாரத்திற்குத் தொடரும். இதனைத் தொடர்ந்து ஆக்லாந்தில் கரோனா கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21 ஆம் தேதிவரை தொடரும். கரோனா தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நியூசிலாந்து மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து தீவில் 100 நாட்களைக் கடந்து, கரோனா தொற்று இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதற்காக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கும் வாழ்த்துத் தெரிவித்தது.

கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் 1,798 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,678 பேர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT