இந்தியாவுடன் தனித்துவமான ஒரு உறவு கொண்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், அகத்தூண்டுதல் பெற இந்தியா சென்று திரும்பினார் என்று ஆப்பிள் நிறுவன தலைமைச் செயலதிகாரி டிம் குக், பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.
குக் கூறும்போது, “ஒவ்வொரு ஆப்பிள் ஊழியர் இதயத்திலும் இந்தியாவுக்கு சிறப்பான இடம் உள்ளது, இதற்கு ஒரே காரணம், ஸ்டீவ் ஜாப்ஸ் தனது இளம் வயதில் அகத்தூண்டுதல் பெற இந்தியா சென்று திரும்பியதுதான். அவர் அன்று இந்தியாவில் என்ன பார்த்தாரோ அதுதான் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்க அவரிடம் ஆசையை உருவாக்கியது” என்று கூறியதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
மோடியை சந்தித்த டிம் குக், ஆப்-மேம்பாட்டு தொழில்நுட்பம் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் ஒவ்வொரு தனிநபர் ஆப்-மேம்பாட்டாளரும் ஒவ்வொரு தனி உரிமையாளர்களாக மாறிவிடுவார்கள் என்று கூறியுள்ளார். சீனாவில் ஆப்பிள் 15 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதையும் அவர் சுட்டிக்காட்டியதாக செய்தித் தொடர்பாளர் விவரித்தார்.
பிரதமர் மோடியச் சந்தித்த ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக், “பிரதமர் மோடியுடனான எனது சந்திப்பு அபாரமாக அமைந்தது” என்றார்.