சிரிய நாட்டு அகதிகளுக்காக தங்களது நாட்டு கதவு எப்போதும் திறந்து இருப்பதாக அர்ஜென்டினா தெரிவித்துள்ளது.
இதனிடையே இதுவரை 100க்கும் குறைவானோரையே அகதிகளாக தென் அமெரிக்க நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர் அனிபெல் ஃபெர்னாண்டர்ஸ் கூறும்போது, "கடந்த ஆண்டு முதல் சிரிய நாட்டு அகதிகள் இங்கு வருவதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டது. சிரியர்களை நாங்கள் எங்கள் நாட்டு கலாசாரத்தின்படி வரவேற்போம்" என்றார். ஆனால் இதுவரை அவர்களது நாட்டில் குடிபுகுந்த சிரிய அகதிகளின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை.
இதனிடையே மொத்த தென் அமெரிக்க நாடுகளிலும் 100-க்கும் குறைவான சிரிய நாட்டு அகதிகளே முறையாக அனுமதிக்கப்பட்டதாக அகதிகளுக்கான ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
சிரியா நாட்டு சிறுவன் ஆய்லான் இறந்த புகைப்படக் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை உருவாக்கி நிலையில் சில நாடுகள் அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அகதிகள் குடியேற்றத்தை தவிர்த்து வந்த இங்கிலாந்தும் இந்த அறிவிப்பை வெளியிட்டது. “நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்து மக்களின் துயரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு நான் இன்று அறிவிக்கிறேன், ஆயிரக்கணக்கான சிரியா நாட்டு அகதிகளை வரவேற்க முடிவெடுத்துள்ளோம்.
இன்னும் அதிகமாகக் கூட நாங்கள் செய்வோம். ஏற்கெனவே உள்ள திட்டங்களின் படி ஆயிரம் அகதிகளை முதற்கட்டமாக வரவேற்கிறோம்” என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார்.