நல்லெண்ண அடிப்படையில் 22 ஆப்கன் ராணுவ வீரர்கல் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தலிபான்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் வெவ்வேறு பகுதிகளில் பிடிப்பட்ட ஆப்கன் படை வீரர்கள் 22 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளை மறுபக்கத்திலும் எதிர்பார்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இன்று தோஹாவில் ஆப்கன் உயரதிகாரிகள் மற்றும் தலிபான்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் பங்கேற்ற ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்க உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா கூறும்போது, “ஆப்கனின் அமைதிக்காக வந்த அனைவரையும் வரவேற்கிறோம். நான் இங்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் சார்பாக பேச வந்திருக்கிறேன். ஆப்கன் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்ட தலிபான்களுக்கு நன்றி.
ஆப்கானியர்களின் வலியை முடிவுக்குக் கொண்டு வந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி விவாதிக்க வேண்டிய நாள் இன்று” என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது.
மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.
பக்ரீத் திருநாளை முன்னிட்டு அங்கு போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் ஒப்புக்கொண்டனர். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்