சிரியாவில் 4 ஆண்டுகளாக போர்ச்சூழல் நிலவுகிறது. ஆனால் 2015-ல் தான் ஐரோப்பா தங்கள் நாட்டுக்கு வரும் அகதிகள் பற்றி விழிப்படைந்துள்ளது.
ஆகவே, இப்போது ஐரோப்பா விழித்துக் கொண்டது ஏன்? என்பதற்கான நிச்சயமான விளக்கங்களைக் கண்டுபிடிப்பது கடினம். ஆனால் புலம் பெயர்ந்த சிரியா அகதிகளிடம் உரையாடியது மற்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கலப்பான காரணங்களை முன்வைக்கிறது.
முதல் காரணம்: போர் என்பது முடிவடையும் வழியாகத் தெரியவில்லை. இதனால் சிரியா நாட்டுக்காரர்கள் வாழ்க்கையை தேடி புலம் பெயர நேரிட்டதோடு, துருக்கியில் உள்ள சிரியா நாட்டுக்காரர்கள் தங்கள் சொந்த நாடு திரும்பும் நம்பிக்கையை கைவிட்டு விட்டனர்.
2-வதாக, துருக்கியில் நீண்ட காலம் தங்கிவிட முடியாத நிலை உள்ளது. துருக்கி அகதிகளை வரவேற்பதில் பெரிய அளவுக்கு பெருந்தன்மை காட்டினாலும், 20 லட்சம் சிரியா அகதிகளை ஏற்றுக் கொண்டாலும், சிரியா நாட்டு மக்கள் அங்கு சட்ட ரீதியாக பணியில் சேரும் உரிமையற்றவர்கள். எனவே அங்கு அவர்கள் நிரந்தர வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது.
மேலும், ஏகேபி கட்சிக்கு சமீபத்திய தேர்தல்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, சிரியா அகதிகளுக்கு அவர்கள் சார்பாக இருந்ததே என்பதால் துருக்கியின் எதிர்கால அரசியல் பற்றி அங்குள்ள சிரியா நாட்டு அகதிகளுக்கு பதட்டத்தையே ஏற்படுத்துகிறது.
3-வது காரணம், ஜோர்டான், துருக்கி, மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகள் சார்பாக பணிவிடையாற்றும் ஐ.நா. அமைப்புகள் தங்களிடம் பணம் குறைந்து வருகிறது என்று புகார் தெரிவித்துள்ளனர். இதனால் முகாம்களில் வாழ்க்கை நரகமாகி வருகிறது. இன்னும் சிரியா அகதிகள் ஐ.நா. மனிதார்த்த உதவிகளின் மூலமே ஓரளவுக்கு வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். பணம் எப்போதுமே போதாமையாகவே வந்து சேர்கிறது. பணக்கார நாடுகள் செய்யும் உதவி கூட தேவைக்கு 40% குறைவாகவே உள்ளது.
இந்த புள்ளிவிவரம் சிரியா பகுதிக்கு மட்டுமானதே. கிழக்கு ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான அகதிகள் தஞ்சமடைந்துள்ள வேளையில் நிதிநிலைகள் இன்னும் கூட மோசமாகவே உள்ளது. யு.என்.எச்.சி.ஆர். 14 மில்லியன் பவுண்டுகள் உதவித்தொகை கேட்டாலும், இலக்கை 9 சதவீதமே எட்ட முடிந்தது.
4வதாக, மக்கள் போதுமான பணத்தை சேமித்துள்ளனர். கிரீஸைக் கடந்து ஐரோப்பாவுக்குள் செல்வது என்பது செலவு பிடிக்கும் ஒரு திட்டம். எவ்வளவு கடத்தல் காரர்களை ஒரு குடும்பம் நம்பியிருக்கிறது என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தனிநபருக்கும் ஜெர்மனியில் தஞ்சமடைய 3,000 டாலர்கள் செலவாகிறது.
5-வதாக இப்போது தெரிந்த வழி கிடைத்துவிட்டது. மக்கள் பால்கனிலிருந்து ஐரோப்பாவுக்கு வருவது வழக்கம், ஆனால் சிரியா நாட்டு அகதிகள் அந்த வழியை பயன்படுத்துவதில்லை. அவர்கள் இதனை மாற்றிவிட்டனர்.
6-வதாக இது ஏன் நெருக்கடி என்றால், ஐரோப்பா அதற்கு எதிர்வினையாற்றும் விதத்தினால் நெருக்கடியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அகதிகள் வரத்து குறித்து ஆரோக்கியமான எந்த முடிவையும் எடுக்காமல் விவாதித்து, ஒத்திப் போட்டு வந்துள்ளனர்.
கடைசியாக, எவ்வளவு பேர் ஐரோப்பாவுக்குள் வருகின்றனர் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர் ஐரோப்பிய அரசுகள். இந்த எண்ணிக்கை சிரியாவின் அண்டை நாடுகளை ஒப்பிடும் போது ஒன்றுமேயில்லை என்பதுதான் நிதர்சனம்.
(கார்டியன் நியூஸ்பேப்பர் லிட்., 2015)