உலகம்

கரோனாவை கட்டுப்படுத்திய பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பு பாராட்டு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சிறப்பாக நடவடிக்கைகள் எடுத்து கையாண்டதற்காக பாகிஸ்தானுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கூறியதாவது:

“ கம்போடியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியா, ஸ்பெயின், வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதலை சிறப்பாக கையாண்டுள்ளனர். இதற்கு முன்னர் இந்த நாடுகள் சார்ஸ், மெர்ஸ், போலியோ, எபோலா போன்ற வைரஸ்களை கட்டுபடுத்தியதன் காரணமாக அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றன. எனவேதான் கூறுகிறேன் இந்தத் தொற்று நோயினால் நாம் கற்று கொள்ளும் பாடம் மிக முக்கியம்.

மேலும் பாகிஸ்தான் இந்த இக்கட்டான சூழலிலும் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசிகளை கொண்டு சென்றிருக்கிறது. கரோனா வைரஸையும் கட்டுப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 1000 பேருக்கும் குறைவாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு உண்மையில் குறைந்துவிட்டதா? அல்லது மருத்துவப் பரிசோதனைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக தொற்று குறைவாகக் காணப்படுகின்றதா என சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.

முன்னதாக, பாகிஸ்தானில் கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி தளர்த்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த இரண்டு மாகாணங்களிலும் தற்போது தொற்று குறைந்துள்ளது.

SCROLL FOR NEXT