இராக்கில் 5,200 ஆக இருக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 3,000 ஆகக் குறைக்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில், “இராக்கில் சுமார் 5,200 ஆக உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 3,000 ஆகக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறோம். மேலும், எங்கள் கூட்டாளர்களோடு இணைந்து அவர்களது திட்டத்தை விரிவாக்க உதவுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபரானது முதலே சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு ஈரான் புரட்சிப் படைத் தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று போராட்டம் வெடித்தது. அமெரிக்கத் தூதரகமும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.
முன்னதாக, ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியால் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க இராக் அரசு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து இராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2017 ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றதாக இராக் அரசு அறிவித்தது.
எனினும் நாட்டின் சில இடங்களில் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் சண்டையிட்டு வருகின்றனர்.