உலக சுகாதார அமைப்பின் தலைமை மருத்துவர் மைக்கேல் ரேயான்: கோப்புப்படம் 
உலகம்

கரோனா பற்றி அரசியல் நோக்கத்தோடு திரிக்கப்படும் தகவல்களைத்தான் அரசுகள் வழங்குகின்றன: உலக சுகாதார அமைப்பின் தலைமை மருத்துவர் வேதனை

செய்திப்பிரிவு

அடுத்த பெருந்தொற்று நோய்க்கு உலகம் கண்டிப்பாக சிறப்பாகத் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதானம் கெப்ரியாசிஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு 2.71 கோடியை எட்டியுள்ளது இதுவரை, 8.88 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் கரோனா பாதிப்பு குறையவில்லை. இதில் அமெரிக்காதான் கரோனாவில் மோசமாகப் பாதி்க்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் இந்தியாவும், 3-வதாக பிரேசில் நாடும் கரோனா பாதிப்பில் உள்ளன.

இந்நிலையில், ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் “அடுத்து பெருந்தொற்று நோய்க்கு உலகம் கண்டிப்பாக சிறப்பாகத் தயாராக வேண்டும். அதற்காக ஒவ்வொரு நாடும், பொது சுகாதாரத்தில் அதிகமான அளவு முதலீடு செய்ய வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை இது கடைசி பெருந்தொற்றாக இருக்காது என்று நினைக்கிறேன். இந்த கரோனா பெருந்தொற்றும், தொற்று நோய்களும் வாழ்க்கையின் உண்மை என்று வரலாறு நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

ஆனால், அடுத்த பெருந்தொற்று மனிதகுலத்தை தாக்கும் போது, இந்த உலகம் கண்டிப்பாக தயாராக இருக்க வேண்டும். கரோனாவுக்கு தயாரான அளவைவிட அதிகமாக தயாராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை மருத்துவர் மைக்கேல் ரேயான் அளித்த பேட்டியில் கூறுகையில் “கரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றி அரசியல் நோக்கத்தோடு தகவல்களை வழங்கும் அரசாங்கங்கள் அரசியல் பின்னடைவை எதிர்கொள்ளக்கூடும்.

மக்களுக்காக மிக எளிமையான, எளிமையான தீர்வுகளை முன்வைக்க முயற்சிப்பது என்பது வெற்றிக்கான நீண்டகால நிர்வாகரீதியான திட்டம் அல்ல. நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும், வெளிப்படைத்தன்மை, நிலைத்தன்மை, நேர்மை, தவறுகளை ஒப்புக்கொள்ளுதல் அவசியம் அரசுக்கு இருக்க வேண்டும்.

பல்வேறு நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்புக் குறித்து அரசியல் நோக்கத்தோடு தவறான தகவல்களைத் தெரிவிக்கின்றன. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த பல ஆண்டுகள் தேவைப்படும், ஆனால் நம்பிக்கை சில வினாடிகளில் குலைந்துவிடும்.

அரசியல் நோக்கத்தோடு திரிக்கப்படும் தகவல்களைத்தான் நாம் பெறுகிறோம் அல்லது ஆதாரங்களை சிதைக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்தால், துரதிர்ஷ்டவசமாக பெரும் குழப்பத்துக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT