கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம், வெள்ளையின மக்களுக்கு ஒரு சட்டம் என அமெரிக்காவில் இரு சட்டங்கள் உள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறும்போது, “அமெரிக்க நீதி துறையில் நிறவெறி இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது நாம் பார்க்கும் யதார்த்தம் பல தலைமுறைகள் கடந்து நாம் பார்த்து வருகிறோம்.
அமெரிக்க நீதி துறையில் கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம், வெள்ளையின மக்களுக்கு ஒரு சட்டம் என இருவேறு சட்டங்கள் உள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம்”என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிரான காவல் துறையின் அடக்குமுறைகள் ஜார்ஜ் பிளாய்ட் மரணதுக்குப் பிறகு வலுவடைந்துள்ளது. இந்த நிலையில் இதனை மையமாக கொண்டும் அமெரிக்க தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக குடியரசுக் கட்சி சார்பாக ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
‘‘நாம் ஆயுட்காலத்தில் சந்தித்திராத பேரழிவான துரோகங்களுக்குரியது பிடனின் வரலாறு. வரலாற்றில் தவறான பக்கத்தில் அவர் காலம் முழுவதும் இருந்து வருகிறார்’’ என்று ட்ரம்ப் தொடர்ந்து அமெரிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஜோ பிடனோ, அமெரிக்காவின் பொருளாதாரத்தை ட்ரம்ப் சரித்துவிட்டார். கரோனா வைரஸை அவர் சரியாக கையாளவில்லை என்று விமர்சித்து வருகிறார்.