வரும் 28-ம் தேதி அமெரிக்காவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடன் உள்ளிட்டோர் அடங்கிய உயர் நிலைக்குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அதிபர் பராக் ஒபாமா பங்கேற்ற பின் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் உயர் நிலை அளவிலான கூட்டம் ஆகும்.
வரும் 28-ம் தேதி ஒபாமா மற்றும் மோடி சந்திப்பு நியூயார்க்கில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.அன்றைய தினம் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் முதல்நாளில் அதிபர் ஒபாமா பேசவுள்ளார். இதனால், மும்முரமான பணிகளுக்கு இடையே தனது நேரத்தை பிரதமர் மோடிக்காக ஒதுக்கியுள்ளார்.
அதைப்போலவே, வரும் 27-ம் தேதி சிலிக்கான் வேலியில் இந்திய அமெரிக்கர்களிடையே பேசும் மோடி, அன்றைய இரவே விமானம் மூலம் நியூயார்க் சென்று அங்கு ஒபாமாவைச் சந்திக்கிறார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு ஒரு வாரத்துக்கும் அதிகமான காலம் இரு தரப்பு உயர்நிலை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் துணை அதிபர் ஜோ பிடன் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களாக இருக்கும் இருதரப்பு வர்த்தக பரிவர்த் தனையை 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.