ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுத்தது தொடர்பாக தங்களுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் கூறும்போது,”அலெக்ஸி நவால்னிக்கு நேர்ந்தது பயங்கரமானது. இது நிச்சயம் நடந்திருக்கக் கூடாது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் அருந்தியது தொடர்பாக தங்களுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து அவரின் வழக்கைக் காண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.
ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாம்ஸ்க் விமான நிலையத்தில் அலெக்ஸி குடித்த டீயில் விஷம் கலந்து இருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ரஷ்யாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று பெர்லின் அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அலெக்ஸிக்கு நேர்ந்தது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.