அமெரிக்காவில் கரோனா பலி, இந்த வருட இறுதியில் 4 லட்சமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாஷிங்டன் சுகாதாரப் பல்கலைக்கழகம் தரப்பில், ''அமெரிக்காவில் தற்போது உள்ள நிலைமையே தொடர்ந்தால் டிசம்பரில் கரோனா பலி 4 லட்சத்தைக் கடக்கும். டிசம்பரில் மட்டும் ஒவ்வொரு நாளும் 3,000 பேர்வரை இறக்கக்கூடும். அமெரிக்கர்கள் முகக் கவசத்தை சரியாக அணிந்தால் மரண சதவீதம் 30% குறையும். ஆனால் அமெரிக்காவில் முகக்கவசம் அணிவது குறைந்து வருகிறது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 63 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இறப்பு 2 லட்சத்தை நெருங்க உள்ளது.
கரோனா வைரஸின் பாதிப்பு ஒருபக்கம் இருந்தாலும் அமெரிக்கா மீள முயன்று வந்தாலும் அதன் பொருளாதாரம் மீள ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் அங்கு 242 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளில் பரவியுள்ளது. கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.
உலகம் முழுவதும் சுமார் 2.6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.