உலகம்

இந்திய பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர்: ட்ரம்ப் புகழாரம்

செய்திப்பிரிவு

இந்திய பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். அவர் சிறந்த பணிகளை செய்து வருகிறார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டனில் பத்திரிகையாளர்களிடம் அதிபர் ட்ரம்ப் பேசும்போது, “ பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். அவர் சிறந்த பணிகளை செய்து வருகிறார். அவர் செய்வது சுலபம் அல்ல. ஆனால் அதனை அவர் செய்து வருகிறார். இந்தியா சிறந்த தலைவரையும், சிறந்த மனிதரையும் கொண்டுள்ளது. எங்களுக்கு இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடியின் ஆதரவு உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக குடியரசுக் கட்சி சார்பாக ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில், நாம் ஆயுட்காலத்தில் சந்தித்திராத பேரழிவான துரோகங்களுக்குரியவர் என்பது பிடனின் வரலாறு. வரலாற்றில் தவறான பக்கத்தில் அவர் காலம் முழுதும் இருந்து வருகிறார் என்று ட்ரம்ப் தொடர்ந்து அமெரிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஜோ பிடனோ, அமெரிக்காவின் பொருளாதாரத்தை ட்ரம்ப் சரித்துவிட்டார். கரோனா வைரஸை அவர் சரியாக கையாளவில்லை என்று விமர்சித்து வருகிறார்.

SCROLL FOR NEXT