சீனாவின் பெய்ஜிங் நகருக்கு நேரடி விமான சேவையை சீன அரசு தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து 8 நாடுகள் நேரடி விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீன விமானத் துறை தரப்பில், “ தாய்லாந்து, கம்போடியா, கிரீஸ், டென்மார்க், கனடா உட்பட 8 நாடுகள் சீனாவின் பெய்ஜிங்குக்கு விமான சேவை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த விமான சேவை செப்டம்பர் மூன்றாம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமான பயணத்தில் வரும் பயணிகளில் மூன்று பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த விமானம் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று சீன விமானத்துறை தெரிவித்துள்ளது.
வூஹானில் தோன்றியதாகக் கூறப்படும் கரோனா இன்று உலகையே ஆட்டிப்படைத்து லட்சக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தியுள்ளதோடு உலகில் பல கோடிக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தையே பாதித்துள்ளது.
வூஹானில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 3,869 ஆக உள்ளது.
டிசம்பர் மாதம் சீனாவை உலுக்கிய கரோனாவின் தாக்கத்திலிருந்து வூஹான் ஏப்ரல் மாதத்திலேயே இயல்பு நிலைக்குத் திரும்பியது. மே 18 முதல் உள்ளூர்வாசிகளிடையே கரோனா தொற்று பரவல் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
கரோனா மையமாக,உருவாக்க இடமாக இருந்த சீனா தற்போது மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் அங்கு பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.