ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு கோடி மாணவர்கள் கரோனா பரவலுக்கு இடையே பள்ளிக்குத் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “பிரான்ஸ், போலந்து, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒரு கோடி மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர். போதிய விழிப்புணர்வுடனே மாணவர்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதாக அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை மற்றும் சமூக இடைவெளியைக் கவனமாகப் பின்பற்ற மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் திறப்பு காரணமாக கரோனா மீண்டும் பரவும் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.53 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 84.80 லட்சம் பேர் உயிரிழந்தனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பலநாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
கரோனா வைரஸ் பரவல் காலத்தில் சமூகத்தில் விரைவாக அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது என்பது கரோனா மூலம் நடக்கும் பேரழிவுக்கு வழிவகுத்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.