உலகம்

ரஷ்யாவில் 10 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு: நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,729 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் நேற்று 123 பேர் பலியாக, பலி எண்ணிக்கை 17,299 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் தேசிய தொலைக்காட்சியில் அறிவித்தார். இந்த நிலையில் போதிய பாதுகாப்பு உபரகணங்களுடன் மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT