சவூதி அரேபியாவில் 152 பேரை பலி வாங்கியுள்ள மெர்ஸ் (எம்இஆர்எஸ்) வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
மெர்ஸ் வைரஸ் பல நாடுகளில் பரவி வருவது குறித்து ஐ.நா.வின் ஒரு அங்கமான உலக சுகாதார அமைப்பின் அவசர நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப் படுத்தவும் பாதிக்கப்பட்ட நாடுகள் குறிப்பாக ஆப்ரிக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு உள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் சுகாதார பாதுகாப்பு பிரிவு தலைவர் கீஜி புகுடா செய்தியாளர்களிடம் கூறுகையில், "நிலைமை மிகவும் மோசமாகி வருவதாக முடிவுக்கு வந்துள்ளோம். இதுவிஷயத்தில் அவசரமாக செயல்பட்டு மேற்கொண்டு கிருமி பரவுவதைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம்" என்றார்.
இதுவரை 571 பேர் மெர்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் கூறுகிறது. இதில் 171 பேரின் உயிரிழப்புக்கு இந்த வகை வைரஸ் காரணமாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர் களுக்கு மருத்துவமனையில் மற்ற நோயாளிகளிடமிருந்து இந்த வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வைரஸ் ஒட்டகங்கள் மூலம்தான் பரவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக சவூதி அரேபியா வில்தான் இந்த வைரஸால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஒட்டகங்களின் அருகில் செல்பவர்கள் முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும் என சவூதி அரேபியா வேளாண் துறை அமைச்சகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
எகிப்து, கிரீஸ், ஜோர்டான், குவைத், லெபனான், மலேசியா, ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் யேமன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த டிசம்பர் முதல் மெர்ஸ் வைரஸ் கிருமி பரவி வருகிறது.