மலேசியாவில் கரோனா கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதம்வரை நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை அனைத்து நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன. இந்த நிலையில் கரோனா கட்டுப்பாடுகள் இந்த வருட இறுதிவரை தொடரும் என்று மலேசியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து மலேசியா தரப்பில், “கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதம்வரை அமலில் இருக்கும். கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் உள்ளூரில் கரோனா வைரஸைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவில் நுழைய டிசம்பர் மாதம்வரை தடை விதிக்கப்படுகிறது. மலேசியர்கள் மட்டுமே நாட்டில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இதுவரை 9,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 125 பேர் பலியாகினர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 2.2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.