உலகம்

மேற்கத்திய நாடுகளுடன் உறவை சேதப்படுத்த விரும்பவில்லை: ரஷ்யா விளக்கம்

செய்திப்பிரிவு

அலெக்ஸி நாவல்னி உடல் நிலை பாதிப்பு காரணமாக மேற்கத்திய நாடுகளுடனான உறவை சேதப்படுத்த விரும்ப வில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்ஸி நாவல்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸ் நாவல்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நாவல்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாம்ஸ்க் விமான நிலையத்தில் அலெக்ஸி குடித்த டீயில் விஷம் கலந்து இருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ரஷ்யாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று பெர்லின் அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அலெக்ஸிக்கு நேர்ந்தது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில் இதற்கு தற்போது ரஷ்யா பதிலளித்துள்ளது. அதில் ” அலெக்ஸி நாவல்னி உடல் நிலை பாதிப்பு காரணமாக மேற்கத்திய நாடுகளுடான உறவை சேதப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அலெக்ஸிக்கு மருத்துவ சிகிச்சை இன்னும் முடிவடையவில்லை. எனினும் அலெக்ஸி எதன் காரணமாக நோய்வாய்ப்பட்டார் என்பதை அறிய ரஷ்யாவும் ஆர்வமாக இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT