ஹஜ் பயணம் சென்றுள்ள சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்களுடன் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேற்று புனித நகரமான மெக்காவில் இருந்து மினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர்.
ஹஜ் பயணம் என்பது மெக்கா மாநகரத்தில் மூன்று புனித தலங்கள் சென்ற பின் பூர்த்தி அடைகிறது. இவை மெக்கா, மினா மற்றும் அரபாத் ஆகும். இதில் ஹாஜிக்கள் தங்குமிடம் மினாவில் உள்ள கூடாரங்கள்.
இதற்காக, வெள்ளை அங்கி அணிந்தபடி புனித பயணம் மேற்கொண்டவர்கள், ‘நான் உன்னை நோக்கி வருகிறேன். ஓ ஏக இறைவனே! உன்னை நோக்கி வருகிறேன்’ எனும் பொருள்பட புனித வாசகத்தை கூறியபடி மினாவை நோக்கி கிளம்பினர்.
இவர்கள் மினாவை அடைந்த வுடன் தங்களுக்கு ஹஜ் பயணம் அருளியமைக்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்தனர். மினாவில் ஹாஜிக்கள் நேற்று இரவு முழுவதும் திருக்குர் ஆன் வாசகங்களை ஓதியபடியும், தொழுகைகள் நடத்தியபடியும் இருந்தனர். அவர்கள் அராபாத் குன்றை நோக்கி இன்று பயணம் செய்கிறார்கள்.
அராபாத்தில் தொழுகையை முடித்த பின் அருகிலுள்ள முஜ்டலிபா சென்று கற்களை திரட்டிக் கொண்டு இரவு திறந்தவெளியில் தங்குவார்கள்.இங்கு இரவை கழித்த பின் மீண்டும் மினாவில் உள்ள தங்கள் கூடாரங்களுக்கு திரும்புவார்கள்.
இதன் மறுநாள் தொடர்ந்து மூன்று நாட்கள் மினாவில் உள்ள மூன்று தூண்கள் மீது கல்வீச்சு நடைபெறும்.