துபாய் வங்கிகளில் பல கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்ததாக இந்தியாவைச் சேர்ந்த நகைக் கடை தொழிலதிபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எம். ராமசந்திரன். இவருக்கு வளைகுடா நாடுகளில் அட்லஸ் என்ற குழுமத்தின் பெயரில் நகைக் கடைகளின் கிளைகள் உள்ளன. தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வரும் அவர் அங்குள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட வங்கிகளில் 55 கோடி திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய்) கடன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், வங்கிகளில் இவர் பெற்ற கடன் தொகைக்கான தவணைகளுக்கு இவர் அளித்த காசோலைகள் அனைத்தும், அவரது வங்கிக் கணக்கில் போதிய பண இருப்பு இல்லாமையால் திருப்பி அனுப்பப்பட்டது.
இதனால் ஒருகட்டத்தில் கடன் வழங்கிய வங்கிகள் அனைத்தும் எம்.எம். ராமச்சந்திரனுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.
கடன் கொடுத்த வங்கிகள் ஒன்று சேர்ந்து அளித்த புகார்களின் அடிப்படையில் எம்.எம். ராமச்சந்திரன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், துபாயில் அவரது மகள் மற்றும் மனைவியும் கைதாகியதாக வளைகுடா நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பள பாக்கி
அட்லஸ் நகைக்கடை குழுமத்துக்கு சொந்தமான கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மாதமாக சம்பள பாக்கி இருப்பதாக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், குழுமத்தின் கிளைக் கடையின் மேலாளர் கூறும்போது, "இதுவரை நிறுவனம் எந்த சம்பள பாக்கியையும் வைத்ததில்லை. இதுவே முதல்முறை. கடையின் அதிபர் மோசடி வேலைகளில் ஈடுபடமாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.