தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 324 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைநகர் சியோலில் இரண்டாம் கட்ட அலை தீவிரம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 324 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக தென்கொரியாவில் மூன்றிலக்க எண்களில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 8 நாட்களில் 1,900 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென்கொரியாவில் இதுவரை 16, 670 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 309 பேர் பலியாகி உள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலில் கடந்த வாரம் தேவலாயத்தில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அந்த தேவலாயத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் மக்கள் சமூக இடைவெளியை பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறு தென்கொரிய அரசு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில் தென் கொரியாவில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணித்திருந்தோம். ஆனால், எங்கள் கணிப்பு பொய்யாகியுள்ளது. மே மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் மக்கள் புழக்கம் அதிரிகத்தது. அதன் விளைவாக தற்போது இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று தென்கொரிய நோய் தடுப்பு மையம் முன்னரே தெரிவித்து இருந்தது.