கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 2,63, 601 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,63,601 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,500 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 2,22,56,220 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,82,456 பேர் பலியாகி உள்ளனர். 1,45,19,591 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ், 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினைக் கண்டுபிடித்ததாக ரஷ்யா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்சினின் செயல்திறன் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.