எவ்வளவுதான் அறிவியல் முன்னேறி னாலும், வசதிகள் வந்தாலும் இன்னமும் உலகம் முழுவதும் 100 கோடி பேர் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன் படுத்துகின்றனர், என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காலரா, வயிற்றுப்போக்கு, டையாரியா, ஹெபடைடிஸ் ஏ, டைபாய்டு போன்ற நோய்கள் தோன்றவும் பரவவும் காரண மாக இருக்கும் திறந்தவெளி மலம் கழித்தல் பழக்கத்தை உலகம் முழுவதும் இன்றும் மக்கள் பின்பற்றுகிறார்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் மரணமடைவதற்கு இப்பழக்கம் முக்கிய காரணியாகும். வருவாய் பேதங்கள் இதுபோன்ற பழக்கங்கள் தொடர்வதற்குக் காரணமாக இருக்கின்றன என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
“சுகாதாரத்தைப் பேண வறுமை மிகுந்த நாடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கும் முயற்சிகள் அதற்காகச் செலவழிக்கப்பட்ட பணம் எல்லாமும் வீண். மனப்பாங்கு மாற வேண்டுமே தவிர, கட்டமைப்பைக் குறை சொல்லி பயனில்லை. பல இடங்களில் கழிப்பறைகள், தேவையற்றப் பொருட்களை வைத்திருக்கும் கிடங்குகளாகத்தான் பயன் படுகின்றன” என ஐ.நா. புள்ளியியலாளர் ரோல்ப் லூயென்டிக் தெரிவித்துள்ளார்.
திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த பல நாடுகள் இன்று அப்பழக்கத்தை கைவிட்டிருக் கின்றன.
1990களில் வியட்நாமிலும், வங்காள தேசத்திலும் மூன்றில் ஒருவர் இப்பழக் கத்தைப் பின்பற்றினர். எனினும், தொடர்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளால் 2012-ல் இப்பழக்கத்தை இந்நாடுகள் முற்றிலும் கைவிட்டிருக்கின்றன. 1990-ல் இருந்ததைவிட தற்போது திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியாகக் குறைந்திருக்கிறது. அந்த நூறு கோடியில் 90 சதவீதம்பேர் கிராமங்களில் வாழ்கிறார்கள்.
இன்னமும் 26 ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் பின்பற்றப்படுகிறது. இதில் நைஜீரியா மிக மோசமாகி வருகிறது. அங்கு 1990-ல் இப்பழக்கத்தைப் பின்பற்றுபவர்கள் 23 கோடியாக இருந்தனர். ஆனால் 2012ல் 39 கோடியாக அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் இந்த அறிக்கையில் இப் பழக்கத்தைப் பின்பற்றும் 60 கோடி பேருடன் முன்னிலை வகிக்கிறது இந்தியா.
“இந்திய அரசு ஏழைகளுக்குக் கழிப்பறை கட்டிக்கொடுக்க பல கோடிகளை செலவழித்துள்ளது. மத்தியில் இருந்து பகிரப்பட்ட இந்தப் பணம் மாநிலங்களுக்குச் சென்றது. இதைச் செயல்படுத்த மாநிலங்கள் தங்களுக்கென தனி பாதையைப் பின்பற்றின. ஆனால் கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்த்தால், அந்தப் பணம் ஏழைகளைச் சென்றடையவில்லை என்று தெரிகிறது” என்கிறார் லூயென்டிக்.
“இந்தியாவில் மிகவும் அதிர்ச்சியளித்த விஷயம், திறந்தவெளியில் மலம் கழிப் பதைப் பின்பற்றும் பெரும்பாலானவர் களிடம் கைப்பேசியும் இருக்கிறது என்பதுதான்” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மீரா நீரா.
2025-க்குள் இப்பழக்கத்தை ஒழிப்பது என்று இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.