உலகம்

அமெரிக்காவில் சீக்கியர் மீது மர்ம நபர் கடும் தாக்குதல்: தீவிரவாதி என அழைத்து வெறுப்புப் பிரச்சாரம்

பிடிஐ

அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர் சீக்கியரை நோக்கி, "நீ ஒரு தீவிரவாதி. பின்லேடனே உன் நாட்டுக்கு திரும்பச் செல்" என ஆவேசமாக கத்தியுள்ளார்.

சம்பவம் குறித்து சீக்கிய அமைப்பு கூறும்போது, "அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் வசித்து வருகிறார் இந்தர்ஜித் சிங் முக்கர். இவர் கடந்த 8-ம் தேதி தனது காரில் பலசரக்கு கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவரது காரை பின் தொடர்ந்த நபர், இந்தர்ஜித் காரை ஓட்டவிடாமல் இடையூறு செய்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் இந்தர்ஜித் காரை நிறுத்திவிட்டு அந்த மர்ம நபர் செல்வதற்கு வழிவிட்டிருக்கிறார். ஆனால், அவரோ காரில் இருந்து இறங்கி வேகமாக இந்தர்ஜித்தை நோக்கி ஓடிவந்து அவரை காரில் இருந்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் இந்தர்ஜித்தின் தாடை கிழிந்தது. அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்" என்றது.

வெறுப்பு பிரச்சாரம் கூடாது:

இந்நிலையில், சம்பவம் குறித்து இந்தர்ஜித்சிங் முக்கர் கூறும்போது, "அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேவேளையில், இத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களை அமெரிக்க அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என்னை தாக்கிய நபர் "நீ ஒரு தீவிரவாதி. பின்லேடனே உன் நாட்டுக்கு திரும்பச் செல்" எனக் கூறினார். அமெரிக்காவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. வெறுப்புணர்வே இதற்குக் காரணம். எனவே இந்தக் குற்றத்தை வெறுப்பு பிரச்சார பின்னணி கொண்டதாக கருதி போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இது புதிதல்ல:

அமெரிக்காவில் சீக்கியர்கள் தாக்குதலுக்குள்ளாவது இது புதிதல்ல என சீக்கியர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் மாகாணத்தில் சந்தீப் சிங் என்ற சீக்கியர் தாக்கப்பட்டார். அவரை தாக்கிய நபரும் சந்தீப்பை தீவிரவாதி என்றே அழைத்தார். அதேபோல், கடந்த 2012-ல் சீக்கிய குருதுவாராவுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 6 சீக்கியர்களை சுட்டுக் கொன்றார், என அந்த அமைப்பு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளை பட்டியலிட்டுள்ளது.

SCROLL FOR NEXT