உலகம்

ஊரடங்கு நீட்டிக்கபடுமா? - நியூசிலாந்து இன்று அறிவிப்பு

செய்திப்பிரிவு

நியூசிலாந்தில் கரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்த முடிவை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இன்று அறிவிக்கிறார்.

இதுகுறித்து நியூசிலாந்து ஊடகங்கள் தரப்பில், “ நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மேலும் பொதுவெளியில் வரும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் ஆக்லாந்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் 1,602 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் பலியாகி உள்ளனர்.

தென் பசிபிக் கடலில் 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நியூசிலாந்து தீவில் 100 நாட்களைக் கடந்து, கரோனா தொற்று இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதற்காக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கும் வாழ்த்துத் தெரிவித்தது.

கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அங்கு கரோனா பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT