அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் : கோப்புப்படம் 
உலகம்

துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டபின் ஜோ பிடனுக்கு குவிந்த 2.60 கோடி டாலர்கள் நன்கொடை 

பிடிஐ


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட 24 மணிநேரத்துக்குள் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்நடத்திய கூட்டத்தில் 2.60 கோடி (ரூ.195 கோடி) அமெரிக்க டாலர்கள் நன்கொடை குவிந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார், ஜனநாயகக்கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இதில் ஜனநாயகக்கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் தேர்வு செய்து அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் நேற்று அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் ஜோ பிடனுக்கே அதிகமான வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் நடந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டில் ஜோ பிடனுக்கு எதிராகக் கட்சிக்குள் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஆனால், தன்னால் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்பதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றார்.

அதிபர் வேட்பாளருக்கு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரிஸையே துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்வு செய்துள்ளது அமெரிக்க மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இன துஷேவத்துக்கு எதிராகவும், போலீஸ் அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து கமலா ஹாரிஸ் தனது வலுவான குரலை எழுப்பி வருகிறார். அதுமட்டுமல்லாமல், அதிபர் ட்ரம்ப் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கையாளவில்லை என்று கடுமையாக விமர்சித்து வந்தார்.

இவை அனைத்தும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள், நடுத்தரப் பிரிவினர், கறுப்பின மக்கள், இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க மக்கள் ஆகியோரிடையே கமலா ஹாரிஸின் நற்பெயரையும் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.

துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸைத் தேர்வு செய்துள்ளதை அமெரிக்காவில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்களும், சீக்கியர்களும், தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் ஆதரித்துள்ளனர். இதனால் ஜனநாயகக்கட்சிக்கு இருக்கும் ஆதரவு மேலும் அதிகரி்த்துள்ளது.

இது நாள்வரை அமெரிக்க வரலாற்றில் அதிபராகவோ அல்லது துணை அதிபராக எந்த அமெரிக்கப் பெண்ணும் இருந்ததில்லை. அதிலும் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் தேர்தலில் போட்டியி்ட்டு வென்றதில்லை. கமலா ஹாரிஸ் போட்டியிடுவது கறுப்பின மக்களிடையேயும் பெருத்தஆதரவை தேடித்தந்துள்ளது.

இந்த சூழலில் நேற்று முதல்முறையாக அதிபர் ஜோ பிடனுடன் சேர்ந்து நிதிசேர்ப்புக் கூட்டத்தில் டெலாவேர் நகரில் கமலா ஹாரிஸ் பங்கேற்றார். ஆனால், இதுநாள்வரை இல்லாத வகையில் ஜோ பிடன் நிதிசேர்ப்பு கூட்டத்தில் நேற்று ஒரேநாளில் 2.60 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி குவிந்தது.

துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டது சரியானது என்பதை மக்கள் இந்த நிதி அளிப்பின் மூலம் நிரூபித்துள்ளார்கள் என்று ஜோ பிடன் புகழாரம் சூட்டினார்.

அதுமட்டுமல்லாமல் வரும் நாட்களில் நடக்கும் அனைத்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் ஜோ பேடனுக்கு வலுவான ஆதரவைதிரட்டும் முக்கிய நபராக கமலா ஹாரிஸ் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெலாவேரில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கமலா ஹாரிஸ் பேசுகையில் “ இந்த பிரச்சாரக் கூட்டத்தில் மக்களின் ஆதரவைப் பார்க்கும் போது, எனது நம்பிக்கையை மேலும் வளரச் செய்கிறது. எனக்கு அளவுக்கு அதிகமான ஊக்கத்தை அளிக்கிறது “ எனத் தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ் இன்னும் தான் போட்டியிட்டு வென்ற சொந்த மாநிலமான கலிபோர்னியாவுக்குச் செல்லவில்லை. கலிபோர்னியா மாநிலம், கமலா ஹாரிஸின் ஏடிஎம் என்று அழைக்கப்படுகிறது. அங்கு கமலா ஹாரிஸ் பிரச்சாரம் செய்யும் போது அவருக்கு நிதி அவர் எதிர்பார்த்த அளவைவிட அதிகரிக்கும் என்று தேர்தல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT