உலகம்

கமலா ஹாரிஸை தேர்வு  செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளது: ட்ரம்ப்

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை தேர்வு செய்திருப்பது ஆச்சிரியமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, " அமெரிக்க செனட் சபையில் உள்ள எவரைவிடவும் கமலா ஹாரிஸ் மிகவும் மோசமானவர், மிகவும் கடுமையானவர், மிகவும் அவமரியாதை செய்பவர் என்று நான் நினைத்தேன். கமலாவை ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக பிடன் தேர்வு செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார்.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் என்ற பெருமையைப் பெறுவார். இவரின் தாய் இந்தியர், பூர்வீகத்தில் தமிழகப் பெண் ஆவார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் நடந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டில் ஜோ பிடனுக்கு எதிராகக் கட்சிக்குள் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஆனால், தன்னால் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்பதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றார். இந்த சூழலில் கமலா ஹாரிஸை ஜோ பிடன் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT