உலகம்

உலகின் விலை உயர்ந்த முகக் கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ள இஸ்ரேல்

செய்திப்பிரிவு

உலகின் விலை உயர்ந்த முகக்கவசத்தை இஸ்ரேலைச் சேர்ந்த நகை நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. இதன் விலை 1.5 மில்லியன் டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் உலக மக்களுக்கு முகக் கவசத்தை அவசியப் பொருளாக மாற்றியுள்ளது. பல நிறுவனங்கள் முகக் கவசத்தை விளம்பரப் பொருளாகக் கையில் எடுத்துள்ளன. அந்த வகையில் இஸ்ரேலின் பிரபல நகை நிறுவனமான யவெல் காமெனி, உலகின் விலை உயர்ந்த முகக் கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

யவெல் நிறுவனத்தின் உரிமையாளர் லிவி கூறும்போது, “பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. ஆனால், உலகின் விலை உயர்ந்த முகக்கவசத்தை வாங்க முடியும். இந்த முகக் கவசத்தை அணிந்தால் அந்த நபருக்கு கவன ஈர்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அவர் மகிழ்ச்சி பெறுவார்” என்று தெரிவித்துள்ளார்.

18 காரட் எடை கொண்ட தங்கத்திலான இந்த முகக்கவசம் சுமார் 3,600 எண்ணிக்கை கொண்ட வெள்ளை மற்றும் கறுப்புக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1.5 மில்லியன் டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

SCROLL FOR NEXT